திருநெல்வேலி மாவட்டத்தில் 2025 - 2026 ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய அனைத்து மாணவர்களையும் 100% உயர்கல்வியில் சேர்த்திடும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பொதுத்தேர்வு எழுதி, இதுவரை எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சேராத மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 14.09.2026 வரையிலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான (ITI) 07.09.2026 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 90 இடங்களும், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 34 இடங்களும், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 183 இடங்களும் காலியாக உள்ளன.

மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான பேட்டை மற்றும் இராதாபுரம் ஐடிஐக்களில் மோட்டார் மெக்கானிக், Industrial Robotics உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவுகளில் தலா 72 மற்றும் 27 காலியிடங்கள் உள்ளன.

எனவே, பொதுத்தேர்வு எழுதி இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் சேர்ந்து தங்களது உயர்கல்வியினை தொடருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.