உலகளவில் ஒரே நாளில் ஏராளமான மரங்களை நட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டிருக்கலாம். தேசிய அளவிலும் இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால் "விதைப்பந்துகள்" என்ற வித்தியாசமான நிகழ்வு 2026 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக நடந்துள்ளது. இதனை வெற்றிகரமாக அரங்கேற்றியவர் விதைப்பந்து நிபுணர் திருமாறன்.

விதைப்பந்து எனும் புதிய விஷயத்தை சமீபகாலமாகத் தான் மக்கள் கேள்விப்படுகிறார்கள். ஜப்பான், ஆப்ரிக்கா நாடுகளில் விதைப்பந்து தயாரித்தெறியும் வழக்கம் இருந்தாலும் தனி மனிதராக, ஒன்மேன் ஆர்மியாக திருமாறன் இதனை செய்து காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளை தேடிச்சென்று விதைப்பந்து தயாரிப்பை கற்றுத் தருகிறார். யாரிடமும் இதற்கு கூலி வாங்கியதில்லை.

தம்முடைய சுய உழைப்பால் மட்டுமே விதைப்பந்து முறையினை பிரபலப்படுத்தியுள்ளார். அதற்காக "விதைப்பந்து" என்பதற்கு திருமாறன் ஏகபோக உரிமையை கேட்டதுமில்லை, கொண்டாடியதுமில்லை. இதை எல்லோரும் தனித்தனியாகவும், கூட்டமாகவும் செய்ய வேண்டும் என்பது தான் அவரது விருப்பம். விதைப்பந்துகள் வீசுவதால் உலகம் செழிக்க வேண்டும், மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், ஆக்ஸிஜன் உற்பத்தி பெருக வேண்டும் என்பது தான் இந்த கிராமவாசியின் எண்ணம். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. "விதைப்பந்துகள் வீச்சால்" உலகம் பசுமை ஆங்கவிட்டது என ஒருநாள் பேசப்படும் போது அந்த வரலாற்றுப் பதிவில் திருமாறன் கண்டிப்பாக இருப்பார்.

வறண்டு கிடந்த பாட வகுப்பறைகளை விதைப்பந்து விழிப்புணர்வால் எழுச்சி அடையச் செய்த பெருமை இவருக்கு உண்டு என பல பள்ளித் தலைமைகளும், ஆசிரியர்களும் பதிவு செய்துள்ளனர். விதைப்பந்து பயணம் திருமாறனை மாணவ மாணவிகளிடையே பிரபலப்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான பாராட்டுச் சான்றிதழ்களும், விருதுகளும் இவர் சளைக்காமல் வழங்கி வருகிறார்.

பல கோடி பணத்திற்கு சொந்தம் கொண்டாடும் கோடீஸ்வரர்களை இந்த உலகம் பார்த்திருக்கும். ஆனால் பல கோடி மரங்களின் சொந்தக்காரரான திருமாறன் என்ற மர மனிதரை இந்த பூமி நினைப்பது மட்டுமல்ல, கொண்டாடும். அரசு இயந்திரங்களின் ஆசியோடும், ஆதரவோடும் திருநெல்வேலி மாவட்ட பள்ளி மாணவ மாணவிகளை விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட வைத்துள்ளார்.

இனி இது அண்டை மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள், கடல் கடந்து கண்டங்கள் என எட்டுமட்டும் உலக மக்களை எட்டும் என்பது உறுதி. மண் உருண்டைக்குள் ஒளிந்திருக்கும் மர விதைகள் மகத்துவங்கள் செய்யப் போகின்றன. கடல் கடந்து நிறுவப்பட்ட சாம்ராஜ்யங்களையும், மன்னர்கள் கால அணைகள், கோயில்கள், கோபுரங்கள் பற்றியே படித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் சிறு வயதிலேயே விதைப்பந்து வீச்சால் "மர அதிபதி"களாக உருவெடுக்கட்டும் என்கிறார் திருமாறன்.

இவர் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டத்தின், வெங்காடம்பட்டி கஸ்பாவில். இரத்ததானக் கழகம், சுனாமிப்பணிகள், குழந்தைகள் இல்லங்கள், சிலம்பக் கலைக்கு பட்டயப் படிப்பு, ஏழை பிள்ளைகளுக்கு படிப்பு, உணவு, உடை, சாதனையாளர்களுக்கு வருடாந்திர விருதுகள் என இவரின் பொதுச்சேவை விரிந்து பரந்தது.