தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் மகேசுவரன் (54) என்பவரது அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஜெ. அனிதா தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 9 மணி வரை நீடித்த இச்சோதனையின்போது, ஆணையரின் மேஜை மீது இருந்த 3 துண்டுச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து அவரது சேமிப்பு வங்கி கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். விசாரணையில், நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் பல்வேறு காலகட்டங்களில் அவரது சொந்த சேமிப்புக் கணக்கிற்கு மொத்தம் ரூ.20,06,500 வரவு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது அந்தக் கணக்கில் ரூ. 15 லட்சம் இருப்பு உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும், இவ்வளவு பெரிய தொகைக்கான சரியான ஆவணங்களையோ அல்லது பணத்திற்கான ஆதாரங்களையோ அவரால் முறையாக விளக்க முடியவில்லை. இதனால் இந்தப் பரிமாற்றங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ. 7,500 ரொக்கப்பணமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.