தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்திற்குட்பட்ட நாகலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நாகலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தக் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரெனப் பெய்த இந்த கனமழையினால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து தாழ்வான பகுதிகளில் குளிர்ந்தக் காற்று வீசி வருகிறது. மேலும், விவசாயப் பணிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.