மும்பையின் மிகப்பணக்கார விநாயகர் மண்டலாகக் கருதப்படும் கிங்ஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி. சேவா மண்டல், வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காகத் தனது விநாயகர் சிலை மற்றும் பக்தர்களுக்கு ரூ.703.27 கோடிக்கு மெகா காப்பீடு செய்துள்ளது.

ஜி.எஸ்.பி. சேவா மண்டல் தனது 72-ஆவது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை வரும் செப்டம்பர் 14 முதல் 18 வரை 5 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடத் தயாராகி வருகிறது. இப் பெருவிழாவின் போது பிரதிஷ்டை செய்யப்படும் 'மகா கணபதி' சிலைக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 66 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு ரூ.474 கோடிக்குக் காப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் விதமாகக் காப்பீட்டுத் தொகை ரூ.703 கோடியே 27 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் விநாயகர் சிலை, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரத்தினக் கற்களுக்கு மட்டுமன்றி, விழாவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் இயற்கை வழிப் பொருட்களால் உருவாக்கப்படும் இந்த விநாயகரின் முதல் தோற்றம் (விராட் தர்ஷன்), செப்டம்பர் 12 அன்று இரவு 8 மணிக்கு முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

5 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும், மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பிரசாதமும் வழங்கப்படவுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காகித ரசீதுகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் ரசீதுகள் வழங்கப்பட உள்ளதாக ஜி.எஸ்.பி. சேவா மண்டலின் செய்தித் தொடர்பாளர் அமித் பை தெரிவித்துள்ளார்.