முதலமைச்சர் குறித்துச் சர்ச்சையான வகையில் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த வேலூர் காட்பாடி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனைப் புழல் போலீசார் விழுப்புரத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி. (DTCP), சி.எம்.டி.ஏ. (CMDA) உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். அப்போது, புழல் சிறை வாசலில் திரண்ட திமுகவினர் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். அந்தப் போராட்டத்தின் போது வேலூர் காட்பாடியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன், முதலமைச்சர் விஜய் குறித்து மிகவும் சர்ச்சையான முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் புழல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்கத் தனது நண்பர்களுடன் பெங்களூரு செல்வது போல் போக்கு காட்டிவிட்டு, விழுப்புரத்தில் சென்று டீட்டா சரவணன் பதுங்கியிருந்தார்.
செல்போன் சிக்னல் மற்றும் ரகசியத் தகவலின் அடிப்படையில் விழுப்புரத்தில் பதுங்கியிருந்த அவரைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டீட்டா சரவணனை மேலதிக விசாரணைக்காகப் போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

