ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரி மூலம் இலங்கைக்குக் கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், OCIU காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான காவல் துறையினர் விளாத்திகுளம் காவல் உட்கோட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குளம் கிராமப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் முன்னால் வழி காட்டிச் சென்ற 'மகேந்திரா கார் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த மீன் ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரியை மறித்துச் சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 318 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாகக் காரில் வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி. ஜோஷ்வாகணராஜ் (47), மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தன்வேல் (51), யாதலா ஸ்ரீனிவாஸ் கல்யாண் (24) ஆகிய 3 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 318 கிலோ கஞ்சா, மகேந்திரா கார், மற்றும் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களையும் OCIU காவல் துறையினர் மேலதிக நடவடிக்கைக்காகக் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.