தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உருளைக்குடியை அடுத்துள்ள ராவுத்தர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் யாக்கோபு; கட்டிடக் கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் சித்ராதேவி, உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்தபோது தேசிய திறனாய்வுத் தேர்வில் வட்டார அளவில் முதலிடம் பிடித்தார்.

மாணவியின் திறமையைக் கண்ட கணித ஆசிரியர் முயற்சியால் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் சேர்ந்து 12-ஆம் வகுப்பில் 466 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் நீட் பயிற்சி பெற்று, 3-வது முயற்சியில் 462 மதிப்பெண்கள் எடுத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்றார்.

முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்குக் ரூ.8.45 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தந்தையின் வருமான வரம்பின் அடிப்படையில் அரசு சார்பில் ரூ.4.50 லட்சம் செலுத்தப்படும். மீதமுள்ள ரூ.3.95 லட்சத்தை மாணவியால் செலுத்த முடியாத ஏழ்மை நிலை நிலவியது.

தாயாரின் மருத்துவச் செலவு, தங்கையின் படிப்புச் செலவு என குடும்பமே தந்தையின் கூலி வருமானத்தை மட்டுமே நம்பியிருந்ததால், மாணவியின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாக மாறியது. இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஊடகச் செய்தியைக் கண்டு நெகிழ்ந்த நாலுமாவடி 'இயேசு விடுவிக்கிறார்' ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ், மாணவிக்கு உடனடியாக உதவிட முன்வந்தார். 'நாலுமாவடி புது வாழ்வு சங்க அறக்கட்டளை' அறங்காவலர் மருத்துவர் அன்புராஜன் மூலம் மாணவியைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, மாணவியின் 5 ஆண்டு மருத்துவப் படிப்பிற்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக முதலாம் ஆண்டிற்கான ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மோகன் சி. லாசரஸ் மாணவியிடம் நேரில் வழங்கினார்.

காசோலையை வழங்கிய மோகன் சி. லாசரஸ் பேசுகையில்: "ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதும், சமூகப் பணிகளை மேற்கொள்வதும் நமது கடமை. செய்தியைப் பார்த்தவுடன் உதவி செய்ய வேண்டும் எனத் தோன்றியது. மாணவி சித்ராதேவி சிறந்த மருத்துவராக உருவெடுத்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்" என்றார்.

காசோலையைப் பெற்றுக் கொண்ட மாணவி சித்ராதேவி, நன்றி தெரிவித்துப் பேசுகையில்: "பள்ளிப் பருவத்தில் தோழிகளின் உதவியோடுதான் கட்டணம் செலுத்திப் படித்தேன். தற்போது எனது மருத்துவக் கனவை நனவாக்கிய இயேசு விடுவிக்கிறார் நிறுவனத்திற்கு என் வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.