கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட புறாவிளை மலைக் கிராமத்தில் பல ஆண்டுகளாக நிலவி வந்த மின்னழுத்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில், புதிய மின்சார இணைப்பு மற்றும் மின்மாற்றி வழங்கும் பணியைப் பத்மநாபபுரம் எம்.எல்.ஏ ஆர்.செல்லசுவாமி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களிடையே கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பேசியதாவது: "முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மலைவாழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2 வாரங்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் மலைக்கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். கடந்த 4 வாரங்களில் 8 கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பொன்மனை பேரூராட்சி புறாவிளை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்னழுத்தக் குறைபாட்டைப் போக்க வனத்துறையின் அனுமதி ஒரே வாரத்தில் பெறப்பட்டது. ₹22.38 லட்சம் மதிப்பில் 63 KVA திறன் கொண்ட புதிய மின்மாற்றி மற்றும் 2.2 கி.மீ. தொலைவிற்கு உயர் மின்னழுத்தக் கம்பிப் பாதை அமைக்கப்பட்டு, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த மின்வாரிய மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்."*

மேலும் பேசுகையில், "புறாவிளை கிராம சாலை வசதிக்காகச் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் (SADP) திட்டத்தின் கீழ் ₹1.10 கோடி மதிப்பீட்டிலான திட்ட வரைவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வன உரிமைச் சட்டத்தின் (FRA Act) கீழ் குடியிருப்புக்கான 10 சென்ட் பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கான சமூக உரிமைகள் வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் 100 முதல் 150 பேருக்குப் பட்டாக்கள் வழங்கப்படவுள்ளது" என ஆட்சியர் உறுதியளித்தார்.

நீண்ட நாள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிய ஆட்சியருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் புறாவிளை காணி பழங்குடியின மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முனைவர் அன்பு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் Lt Cdr. டி.மாலதி, மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அசோக் குமார், செயற்பொறியாளர்கள் ஜவகர்முத்து, முருகன், சுனிதா லெஸ்லின், மக்கள் தொடர்பு அலுவலர் வைகுண்ட மணி, வனச்சரகர் கலைமணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.