தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து திட்டமான 'வெற்றிப் பயணம்' விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகளில் பெண்களின் பயணம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் தனியார் பேருந்துத் துறைக்கு பெரும் வருவாய் இழப்பும் தொழில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகப் பேருந்து உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், அதே தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

பயணிகள் அனைவரும் அரசுப் பேருந்துகளிலேயே செல்ல ஆர்வம் காட்டியதால், ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஊழியர்கள் அரசுப் பேருந்தை மறித்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.