தென்காசி மாவட்டம் மேக்கரை மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டார வனப்பகுதிகளில் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் சிறப்புக் குழு அமைத்துத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே மேக்கரை மற்றும் செங்கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 9 காட்டு யானைகள் கூட்டமாக நடமாடி வருகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் இந்த யானைகள், விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருவதாகவும், குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
யானைகளின் நடமாட்டம் காரணமாக விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், குடியிருப்பு வாசிகளும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் அச்சத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர் மேக்கரை பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணியும் நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரமான பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

