உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான 'ஐ.என்.எஸ். மங்ரோல்', இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக நேற்று இணைக்கப்பட்டது. கேரளாவின் கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட இக்கப்பலை, நம் கடற்படையில் இணைக்கும் விழா மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்றது. மேற்கு கடற்படைப் பிரிவின் தலைமை தளபதியான துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் தலைமை தாங்கி, ஐ.என்.எஸ். மங்ரோல் நீர்மூழ்கிக் கப்பலைக் கடற்படை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து முறியடிக்கும் ஆற்றல் கொண்ட இக்கப்பலின் கட்டுமானத்தில், மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உபகரணங்களும் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இக்கப்பலின் நீளம் 256 அடியும், அகலம் 37 அடியும் ஆகும். இதன் மிதவை ஆழம் மிகக் குறைவு என்பதால், பெரிய போர்க்கப்பல்கள் செல்ல முடியாத ஆழமற்ற கடலோரப் பகுதிகளிலும் இது எளிதில் சென்று கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாட்டர்ஜெட்' உந்துவிசை கொண்ட மூன்று டீசல் இன்ஜின்கள் மூலம் இயங்கும் இக்கப்பல், கடற்பரப்பில் அதிகபட்சமாக 25 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியதுடன், மிகக் குறுகிய வளைவுகளிலும் வேகமாகத் திரும்பும் திறன் கொண்டது.
டி.ஆர்.டி.ஓ. (DRDO) எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன சோனார் (ஒலி அலைகள்) மூலம் நீருக்கு அடியில் பதுங்கியிருக்கும் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். மேலும், கடலின் ஆழமான பகுதிகளில் இருந்து வரும் ஒலிகளையும் எதிரொலிகளையும் இது மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும்.
எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை நீருக்கு அடியிலேயே குறிவைத்து அழிக்கக்கூடிய 'டார்பிடோ' ஏவுதளங்கள் மற்றும் குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க உள்நாட்டுத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்கள் டார்பிடோ ஏவுகணைகளை ஏவினால், அதைத் திசை திருப்பிப் பாதுகாக்கும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பமும், எதிரி ரேடார்களின் கண்ணில் எளிதில் படாதவாறு நவீன வடிவமைப்பு முறையும் இதில் இடம்பெற்றுள்ளது.

