மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 11.38 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முக்கியக் குற்றவாளி நிஷாந்த் (25) கொள்ளையடித்த விதம் குறித்து நடித்துக் காட்டினார்.
மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 11.38 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாகப் பழங்காநத்தத்தைச் சேர்ந்த நிஷாந்த் (25), அவரது தோழி மீனாட்சி (22), மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் (54) ஆகியோரைக் கைது செய்த போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் மாலை எஸ்.எஸ்.காலனி போலீசார் நிஷாந்தை ஒருநாள் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நகைக்கடையில் கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து நிஷாந்த் நடித்துக் காட்டினார்.
இவ்வழக்கு குறித்துப் போலீசார் கூறியதாவது: முதல்முறையாகக் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி நகைக்கடையில் கொள்ளையடிக்க நிஷாந்த் முயற்சித்துள்ளார்; இதற்காகத் தோழி மீனாட்சியின் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளார். பின்னர் நவம்பர் 12-ஆம் தேதி நடந்த கொள்ளைக்காகத் தனது இருசக்கர வாகனத்தை மீனாட்சி வீட்டருகே நிறுத்திவிட்டு, சர்வேயர் காலனியில் வாடகைக்கு இருசக்கர வாகனம் எடுத்துள்ளார்.
அந்த வாடகை வாகனத்தின் நம்பர் பிளேட்டைக் கழற்றிவிட்டுச் சென்று கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த், கொள்ளையடித்த நகைப்பையைத் தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு, அந்த வாகனத்தில் பரவை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வாகனத்தின் டயர்களில் இருந்த காற்றை வெளியேற்றி, பழுதானது போல் மினி சரக்கு வேனில் ஏற்றி வந்து வாடகைக் கடையில் ஒப்படைத்துள்ளார்.
மேலும், நிஷாந்த் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாகப் போலீசார் தெரிவித்ததாவது: "ஆடம்பர வாழ்க்கை வாழவும், எனது 'யூடியூப்' சேனலை வளர்க்கவும் (டெவலப் செய்ய), எனக்கு இருந்த ரூ.30 லட்சம் கடனை அடைக்கவும், தோழி மீனாட்சி கட்டி வரும் வீட்டிற்கு உதவவும் ஆசைப்பட்டே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டேன். இதில் நான் மட்டுமே தனிநபராக ஈடுபட்டேன்.
கொள்ளையடித்த நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்க முடிவு செய்திருந்தேன். நகைகளை அப்படியே விற்றால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்பதால், அவற்றை உருக்கித் தங்கக் கட்டியாக்கி விற்பதற்காக உருக்கும் மிஷின் ஒன்றை வாங்க இருந்தேன். உருக்கும்போது சிரமம் ஏற்படும் என்பதால்தான் கற்கள் பதித்த நகைகளை நான் எடுக்கவில்லை" என நிஷாந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

