மதுரை தனியார் நகைக் கடையில் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், விளாச்சேரி கோபாலிபுரம் மலை அடிவாரப் பகுதியிலிருந்து மேலும் 6.2 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

மதுரை தல்லாக்குளம் வைகை சாலையில் உள்ள தனியார் நகைக் கடையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து மதுரை எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

முதல்கட்ட விசாரணையில் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரைத் தேடி வந்த நிலையில், ஒசூரிலிருந்து சேலம் நோக்கித் தனியார் பேருந்தில் பயணித்த நிஷாந்த்தை தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

பின்னர் மதுரை அழைத்து வரப்பட்ட அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை விளாச்சேரி கோபாலிபுரம் மலை அடிவாரப் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக நிஷாந்த் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.2 கிலோ எடையிலான தங்க நகைகளை வெற்றிகரமாக மீட்டனர். ஏற்கனவே மீனாட்சி என்பவரின் அடையாளத்தின்பேரில் மாடக்குளம் பகுதியிலிருந்து 5.5 கிலோ நகைகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீட்கப்பட்ட 6.2 கிலோ தங்கத்தையும் சேர்த்து இதுவரை மொத்தம் 11.7 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.