தமிழ்நாட்டில் காலியாக இருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெற்ற நிகழ்வில், சபாநாயகர் முன்னிலையில் மதுராந்தகம் எம்.எல்.ஏ.வாக மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ.வாக சத்தியபாமா ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் பதவியேற்ற போது அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், சத்தியபாமா 66,841 வாக்குகளும் பெற்று அபார வெற்றி பெற்றனர். தவெக சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே இவ்விரு தொகுதிகளையும் கைப்பற்றி அக்கட்சி முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து காலியான இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழகச் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், உறுப்பினர்களின் ராஜினாமாவால் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்ததால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 227 ஆக இருந்தது.
தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின், சட்டமன்றத்தில் கட்சிகளின் பல விவரம்:
தவெக (ஆளும் கட்சி): 109 (சபாநாயகர் உட்பட)
திமுக: 59
அதிமுக: 41
காங்கிரஸ்: 5
பாட்டாளி மக்கள் கட்சி: 4
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல்: தலா 2
பாஜக, தேமுதிக, அமமுக: தலா 1
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சட்டசபையில் அக்கட்சியின் பலம் 107-லிருந்து 109 ஆக உயர்ந்துள்ளது.

