மதுக்கடைகளை மூடிவிட்டு மனமகிழ் மன்றங்களைத் திறப்பதுதான் மாற்றமா? எனத் தமிழக முதலமைச்சருக்குக் கேள்வி எழுப்பி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாநகரிலும் சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டு, இப்போது வழக்கம்போல அந்தர் பல்டி அடித்துள்ளார் முதலமைச்சர்.
தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனையை வேகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக 5 முதல் 6 விற்பனை கவுண்டர்கள் திறக்கப்பட்டு, காவல்துறையின் பாதுகாப்புடன் மது விற்பனை நடக்கிறது. மேலும், ஆன்லைன் புக்கிங் வசதிகளையும் அமல்படுத்த அரசு ஆயத்தமாகி வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் சூழலில், காவல்துறையினரை மதுக்கடை பாதுகாவலர்கள் போல பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
இப்போது அடுத்த அத்தியாயமாக மனமகிழ் மன்றங்களுக்கு ஆட்சியாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்துள்ளனர். 'கணிசமான எண்ணிக்கையில் மதுக்கடைகளை மூடிவிட்டோம்' என ரீல்ஸ் போடும் தவெக அரசு, மனமகிழ் மன்றங்களைத் திறக்கத் துடிப்பது ஏன்? டாஸ்மாக் கடைகளை மூடினாலும், 'மனமகிழ் மன்றங்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனை படுஜோராக நடப்பதாகப் புகார்கள் எழுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி இந்திரா நகர் பகுதியில் மனமகிழ் மன்றம் அமைக்க அரசு அனுமதி கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. குடியிருப்புப் பகுதிகளில், அதுவும் பள்ளிக் குழந்தைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி தருவது ஏன்? இங்கு மனமகிழ் மன்றம் அமைவதைக் கண்டித்து திமுக மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் மனமகிழ் மன்றத்திற்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல, தவெக அரசும் தூத்துக்குடி மாநகரில் மனமகிழ் மன்றங்கள் திறக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, இந்திரா நகரில் அமையவுள்ள மனமகிழ் மன்றத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

