தனியார் பள்ளியில் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து வந்த மாணவர்களின் காப்புக் கயிற்றை அறுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் இந்து முன்னணியினர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில், நேற்றைய தினம் குலசை முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு மாலை அணிவித்து முத்தாரம்மன் காப்புக் கயிறு அணிந்து சென்ற மாணவர்களின் காப்புக் கயிற்றினை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் எமர்சன் ரஞ்சித் என்பவர் அறுத்தெடுத்து அகற்றியுள்ளார். மேலும், காப்புக் கயிறு அணிந்து யாரும் பள்ளிக்கு வரக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து, இன்று காலை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஜெயராம், திவான் மற்றும் அருணாச்சலம் ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் பக்தர்கள் பள்ளியை முற்றுகையிட்டுச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் எமர்சன் ரஞ்சித் பெற்றோர் மற்றும் பக்தர்களிடம் நேரடியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மேலும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, இது போன்ற மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் சார்பில் முறைப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.