கேரள ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள முக்கியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் வரும் நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட சில தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஒல்லூர் - புதுக்காடு மற்றும் இரிஞ்சாலக்குடா - சாலக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாகக் குருவாயூரில் இருந்து புறப்பட்டுத் திருவனந்தபுரம், நாகர்கோவில் சந்திப்பு வழியாகச் சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 16128) குறிப்பிட்ட 3 நாட்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது.

வரும் நவம்பர் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்குக் புறப்படும் குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், எர்ணாகுளம் மற்றும் காயம்குளம் இடையே வழக்கமான ஆலப்புழா வழித்தடத்திற்குப் பதிலாகக் கோட்டயம் வழியாகத் திருப்பி விடப்படும்.

இந்தப் பாதை மாற்றத்தின் காரணமாக, குறிப்பிட்ட அந்த 3 தேதிகளில் எர்ணாகுளம் ஜங்ஷன், சேர்த்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிப்பாடு ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.

எனினும், பயணிகளின் வசதிக்காக மாற்றுப் பாதையில் உள்ள கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா மற்றும் செங்கன்னூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயிலுக்குத் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.