தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் 100% கழிவு சேகரிப்பு மற்றும் 100% தரம் பிரித்தல் இலக்கை அடையும் வகையில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை 4 வகைகளாகத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் படி, தங்களது வளாகங்களில் உருவாகும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாக (மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சி குப்பை, அபாயகர கழிவு) தரம் பிரித்து, தினசரி வீடுதோறும் வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அனைவரின் கடமையாகும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 100% கழிவு சேகரிப்பு மற்றும் 100% தரம் பிரித்தல் என்ற இலக்கை அடையத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக, தரம் பிரிக்காமல் ஒட்டுமொத்தமாக வைக்கப்படும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே இறுதி எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர், மண்டலங்கள் வாரியாக வீடு வீடாக நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது கழிவுகள் மூலத்திலேயே சரியாகத் தரம் பிரிக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்து, பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆய்வின் போது கழிவுகளைத் தரம் பிரிக்காமல் வைத்திருப்பது, பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவது, மழைநீர் வடிகால்களில் கழிவுகளை வீசி அடைப்பை ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனங்களுக்குச் சுகாதாரப் பிரிவினரால் உடனடியாக அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் எவ்விதத் தொய்வுமின்றி நடைபெறவும், நமது முத்துநகரைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கவும் பொதுமக்களின் பங்கு அவசியமாகும். ஆய்விற்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல், தூய்மைப் பணிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

