கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் கனரக வாகனங்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குக் கனரக வாகனங்கள் மூலமாகக் கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குத் தாது மணல், சரளைக்கல், ஜல்லி மற்றும் பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்கள் அனுமதியின்றி கடத்தப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கனிமவளத்துறை உதவி இயக்குநர் திரு. கிருஷ்ணமூர்த்தி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று (12.10.2026) இரவு முதல் இன்று (13.10.2026) காலை வரை நாகர்கோவில், திக்காணங்கோடு, கருங்கல், அம்சி, மெதுகும்பல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 11.06 மணியளவில் நாகர்கோவில் கான்கார்டியா பள்ளி அருகே தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அவ்வழியாக வந்த கனரக வாகனத்தைச் சோதனையிட்டனர். இதில், எவ்வித அரசு அனுமதியும் (Pass/Permit) இன்றி நெல்லை மாவட்டம் இராதாபுரத்திலிருந்து சட்டவிரோதமாகச் சரளைக்கற்கள் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓட்டுநர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்வதற்காக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், அனுமதியின்றிச் செங்கல் ஏற்றிச் சென்ற மற்றொரு வாகனத்தைப் புதுக்கடை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து, தேங்காய்பட்டணம், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட உள்சாலைகள் வழியாகச் சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என்பதை 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்க வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியிலிருந்து கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்வது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

