கன்னியாகுமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் பேரலைகள் எழ வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, கரையோரப் பொதுமக்கள் நடமாட்டத்தைத் தவிர்க்கவும், மீனவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நாகர்கோவில் (இ) குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் செப்டம்பர் 26-ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 2:30 மணி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2:30 மணி வரை 1.3 முதல் 1.6 மீட்டர் வரை உயரம்கொண்ட அதிக ஆற்றல் வாய்ந்த பேரலைகள் எழக்கூடும் என்று கடல் தகவல் மைய செய்தி பெறப்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் கரையோரமாகக் கடல் சற்று சீற்றத்துடன் காணப்படும் என்றும், தாழ்வான ஒரு சில பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கடற்கரை மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி நடமாடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவர்கள் சிறிய படகுகளைக் கடற்கரையை ஒட்டி இயக்கக் கூடாது. கரையிலிருந்து கடலுக்குச் செல்லும்போதும், கடலிலிருந்து கரை திரும்பும் போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அலை சீற்றம் காரணமாகப் படகுகள் ஒன்றோடொன்று மோதிச் சேதம் அடைவதைத் தவிர்க்க, கரை ஓரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் படகுகளையும் போதுமான இடைவெளியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும்.

மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.