குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் சிரமமின்றி விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக வருகிற 21-ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலக் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 20-ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. மறுநாள் (21-ம் தேதி) மாலையில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.

இந்த ஆண்டு தசரா திருவிழாவைக் காண சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வக்கூட்டம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, திருவிழா காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதை கருத்தில் கொண்டும், சுவாமி தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து விரைவாக தரிசனம் செய்வதற்காகவும் கடந்த 11-ம் தேதி முதல் வருகிற 21-ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களும் பொது தரிசன பாதை வழி மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.