திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீடிக்க முடியாமல் போனதற்கும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கும் திமுகவின் இறுக்கமான அணுகுமுறையே காரணம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக தலைமையின் தவறான கணிப்புகளையும் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.
நீண்டகாலமாகக் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்துவிட்டு, புதிதாக இணைந்த கட்சிக்கு எதிர்பாராத வகையில் அதிக தொகுதிகளை ஒதுக்கியது கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் திமுக கையாண்ட அணுகுமுறையே கூட்டணி சிதையக் காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.
2026 தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியை உடைக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆட்சி அதிகாரத்திற்கான ஆசைகள் காட்டப்பட்டபோதிலும் திராவிட அரசியலைப் பாதுகாக்கும் நோக்கிலேயே பொறுமை காத்ததாகவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னரே, விசிக தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) இணைந்ததாகத் தெளிவுபடுத்தினார். தமக்கு அமைச்சராகும் வாய்ப்புகள் வந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வன்னி அரசுக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சரவையில் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் குறைத்து மதிப்பிட்டது திமுகவின் தவறான கணிப்பு எனக் குறிப்பிட்ட அவர், தவெக தலைவர் விஜய் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைக் கோராத சூழலில்தான் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகப் பேசினார்.

