சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 70 நாட்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்துத் தனிக்கவனம் பெற்றிருந்த அவரது மறைவைத் தொடர்ந்து, அமைந்தகரை தனியார் மருத்துவமனை முன்பு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மூச்சுத் திணறல் பிரச்சினை காரணமாக, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார். கடந்த 70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வி.எஸ். பாபு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்து வெற்றி பெற்றதன் மூலம், தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மாநில அளவில் தனிக்கவனம் பெற்றிருந்தார்.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபுவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். தற்போது வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தியையடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அமைந்தகரை தனியார் மருத்துவமனை வளாகத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் இரங்கல்:

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவிற்கு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: "வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்களோடு மக்களாகப் பழகியவர்.

அனைவரின் அன்பு, ஆதரவு, நம்பிக்கையைப் பெற்றிருந்த வி.எஸ். பாபுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. வி.எஸ். பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்:

இதேபோல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வி.எஸ். பாபு குடும்பத்தினருக்கும், தவெகவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்