தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு கொலை வழக்குகளின் நீதிமன்ற விசாரணையின் போது, உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைச் சிறப்பாக ஒருங்கிணைத்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த தலைமைக்காவலர்கள் இருவரை நெல்லை சரக டி.ஐ.ஜி. நேரில் அழைத்துப் பாராட்டினார்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கின் நீதிமன்றப் பணிகளில் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றியவர் தலைமைக் காவலர் கி. கணபதி அம்மாள்.
அதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கின் நீதிமன்றப் பணிகளில் துரிதமாகச் செயல்பட்டு, உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்து எதிரிக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றியவர் தலைமைக் காவலர் கணேசன்.
நீதிமன்றப் பணிகளில் சிறந்து விளங்கிய இரு தலைமைக்காவலர்களையும் இன்று (06.10.2026) திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் இரா. திருநாவுக்கரசு, திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்தார். அவர்களின் இச்சிறப்பான சேவையைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

