செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலநாட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவரது மகன் குரு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன்களான மாசிலாமணி, துரை மற்றும் குருநாதன் மகன் செல்லதுரை ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதன் காரணமாக, கடந்த 2018-ஆம் ஆண்டு குருவை மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பாகச் செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி தாண்டவம் இன்று (01.09.2026) இறுதித் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 10,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டார்.