புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் விக்ரமாதித்தன் (40). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு புதியம்புத்தூர் போர்ட்சிட்டி நகர் பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை சம்பவம் தொடர்பாகப் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அர்ஜுனன் மகன் ராமர் (30), முருகன் மகன் சக்திவேல் (29), காட்டுராஜா மகன் முத்துக்கனிராஜ் (33) மற்றும் ராமரின் மனைவி (29), கொலையுண்ட விக்ரமாதித்தனின் மனைவி ஆகிய 5 பேருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி தாண்டவம் அவர்கள் இன்று (01.09.2026) இறுதித் தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட ராமர், சக்திவேல், முத்துக்கனிராஜ் மற்றும் 2 பெண்கள் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 20,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

