மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கைவிட வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தீவிரப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்து வரும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, குறைந்த வருமானம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைப் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இந்தப் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

இப்பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் டி. ரவீந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "பொதுமக்கள் சந்தித்து வரும் அன்றாடப் பிரச்சனைகளுக்கு அரசுகள் முன்னுரிமை அளித்துத் தீர்வு காண வேண்டும்; மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.

பிரச்சாரத்தின் போது, மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்டித்துப் பொதுமக்களிடம் விளக்கப்பட்டது. மேலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துதல், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்துத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து, மாநகரக் குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, நாகராஜ், ஆனந்த், இனிதா, காஸ்ட்ரோ ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கிளைச் செயலாளர்கள் இல. ராமமூர்த்தி, வயணப்பெருமாள், மனோகரன், சசிகுமார், கென்னடி, மாவட்டக்குழு உறுப்பினர் கணபதி சுரேஷ், டாக்டர் சிவனாகரன், முத்துமாரி உள்ளிட்ட திரளான கட்சித் தோழர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.