பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் சாப்பாட்டு தட்டுகள் மற்றும் தம்ளர்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இத்திட்டத்திற்குத் தேவையான சாப்பாட்டு தட்டுகள் மற்றும் தம்ளர்களை டி.சி.டபிள்யூ நிறுவனம் சமூகப் பொறுப்புணர்வு நிதி சார்பில் வழங்க முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக, காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உணவுக் தட்டுகள் மற்றும் தம்ளர்கள் வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாக ஆணையர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் நிர்வாகிகள் பிரகாஷ், சண்முகசுந்தர் மற்றும் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்குச் சாப்பாட்டு தட்டுகள் மற்றும் தம்ளர்களை நேரில் வழங்கினர்.

