ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீதான மேல்முறையீட்டைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, இ விவகாரம் குறித்துச் சட்டமன்றத்தில் மிகக் கடுமையாகக் குரல் எழுப்ப வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரியிடம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணியின் போது 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை சீர்குலைத்தது யார், கலவரத்திற்கு யார் காரணம் மற்றும் இதில் தொடர்புடைய காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏன் என்ற கேள்விகளைத் தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்கள் மீதான மேல்முறையீடு ரத்து செய்யப்பட்டதாகத் த.வெ.க அரசு அறிவித்துள்ள செய்தி வலைதளங்களில் வெளியாகித் தூத்துக்குடி மக்களிடையே பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இன்று (01.09.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுவை வழங்கினர்.
அமைதியான போராட்டம் கலவரமாக மாறியது எப்படி, துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்கள் மீது மேல்முறையீடு ஏன் ரத்து செய்யப்பட்டது, பொதுமக்களைக் கலவரத்தின் மூலம் தடுமாறச் செய்தது யார் என்பன உள்ளிட்ட கேள்விகளை மையப்படுத்திச் சட்டசபையில் குரல் எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி, "சட்டமன்றத் தொடர் முடிவதற்குள்ளாக உங்கள் உணர்வுமிக்கக் குரலை நிச்சயம் சட்டமன்றத்தில் பிரதிபலிப்பேன்" என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வின் போது தமிழர் விடியல் கட்சி சேமா. சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் M. அசன், தமிழ் புலிகள் கட்சி மண்டலச் செயலாளர் செ.தாஸ், ஒன்றியச் செயலாளர் சுரேஷ், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஊர்க்காவல் மற்றும் தமிழர் முன்னேற்றக் கழகச் செயலாளர் S. ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

