கோவில்பட்டி நகராட்சி சாலை சீரமைப்பு மற்றும் எகாட்டூர் கிராமத்தில் கடல்நீர் குடிநீராக்கத் திட்ட விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்து துரை வைகோ எம்பி மனு அளித்தார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மறுமலர்ச்சி திமுக தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மூன்று முக்கிய கோரிக்கைக் கடிதங்களை வழங்கினார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பணியாளர்கள்: தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் / வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றும் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கவும், திட்டம் 2.0 / 3.0 மூலம் எவ்விதப் பணியிடைவெளியும் இன்றித் தொடர்ந்து பணி வழங்கி பணிப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
கோவில்பட்டி சாலை சீரமைப்பு: கோவில்பட்டி நகராட்சி வார்டு எண். 21-இல் உள்ள அரசு அலுவலக வளாக சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அளிக்கப்பட்டது.
கடல்நீர் குடிநீராக்கத் திட்டம்: சென்னையை அடுத்த எகாட்டூர் கிராமம் மற்றும் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளைப் பேரூர் 400 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்கத் திட்டத்தின் விநியோக வலையமைப்பில் இணைத்திட விரிவான கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மாவட்ட செயலாளர் அண்ணன் பூந்தமல்லி பாபு, சகோதரர் மாங்காடு முருகன் மற்றும் சகோதரர் நொச்சிக்குப்பம் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

