தமிழக அரசு சார்பில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தை, தற்போது முன்மொழியப்பட்டுள்ள பட்டினப்பாக்கத்திற்குப் பதிலாகக் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய (HRS) வளாகத்தில் அமைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில தகவல் தொடர்புச் செயலாளர் க. சிவசங்கரராமன், முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: புதிய தலைமைச் செயலக வளாகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதில் போக்குவரத்து நெரிசல், கடலோர ஒழுங்குமுறை மண்டல கட்டுப்பாடுகள், மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், கூடுதல் கட்டுமானச் செலவுகள் மற்றும் பயன்பாட்டிலுள்ள ரயில் இணைப்பு இல்லாமை போன்ற பல்வேறு சவால்கள் உள்ளன. இதற்கு மாற்றாகக் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய (HRS) வளாகத்தின் 43 ஏக்கர் நிலத்தைப் பரிசீலிப்பதன் மூலம் அரசுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ளதால், தென் மற்றும் மேற்கு மாவட்டங்களிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் பிற வாகனங்களை நாடாமல் நேரடியாக வந்தடைய முடியும். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெறும் 7-8 கி.மீ (15 நிமிடப் பயணம்) தொலைவில் அமைந்துள்ளதால், அரசு அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற மாவட்ட ஆட்சியர்களின் பயண நேரம் வெகுவாகக் குறையும்.
43 ஏக்கர் நிலமும் நெடுஞ்சாலைத் துறை வசமிருப்பதால், அரசாணை மூலம் பெயரளவுத் தொகையான ரூ.1/- மதிப்பீட்டில் நிலத்தை மாற்றிக் கொ கடலோரப் பகுதிகளில் தேவைப்படும் கடல்சார் அடித்தளக் கட்டுமானம் மற்றும் உப்புக் காற்று அரிப்பைத் தடுக்கும் பூச்சுகளுக்கான கூடுதல் செலவுகள் கிண்டி உள்நிலப் பகுதியில் தேவையில்லை.
பட்டினப்பாக்கம் 25.5 ஏக்கருடன் ஒப்பிடும்போது, கிண்டியின் 43 ஏக்கர் நிலப்பரப்பு கிட்டத்தட்ட இரு மடங்கு பெரியதாகும். எனவே, புதிய தலைமைச் செயலகக் கட்டுமான வரைபடங்களை இறுதி செய்வதற்கு முன்பாக, கிண்டி HRS வளாகத்தின் கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் நிர்வாக நன்மைகளை நிபுணர் குழுக்கள் மூலம் மறுஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

