கன்னியாகுமரி ரயில் நிலையம் ஒரு முக்கிய இறுதி (Terminal) ரயில் நிலையமாக இருப்பதால், பயணிகளின் வசதிக்காக அங்கு நகரும் நடைபாதை (Travelator) அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் நிருவாகக் குழுக் கூட்டம், சங்கத் தலைவரும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.ஆர். ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, அருள் கில்பர்ட் ஜாண், கே.எஸ். ராஜேஷ், முருகதாஸ், பொதுச் செயலாளர் எட்வர்ட் ஜெனி, இணைச் செயலாளர்கள் மோகன், நாராயணமூர்த்தி, முத்துக்குமார், சுஜின்ராஜ், பொருளாளர் எஸ். முருகன் மற்றும் நிருவாகக் குழு உறுப்பினர்கள் கிருபா ஜோஸ்பின், ஆர். ஐயப்பன், ஆனந்த சுரேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:

நகரும் நடைபாதை (Travelator) அமைத்தல்: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து 26 பெட்டிகள் (Coaches) கொண்ட நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுவதால், பிளாட்பாரத்தின் கடைசிப் பெட்டியில் இருந்து நுழைவு வாயில் வரை நடந்து செல்ல முதியவர்கள், நோயாளிகள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கனமான உடமைகளை (Luggages) எடுத்துச் செல்வதும் சவாலாக உள்ளது. எனவே, சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் இருப்பது போல, இரண்டு பிளாட்பாரங்களுக்கு நடுவே உடமைகளுடன் எளிதாகச் செல்ல நகரும் நடைபாதை / நகரும் படிக்கட்டு (Travelator / Escalator) அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகலமான இருக்கை வசதி: ரயில்களில் தனித்தனி இருக்கைகள் கொண்ட பெட்டிகளில், உடல் பருமனான பயணிகள் வசதியாக அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கைகளின் அகலத்தை அதிகரிக்க வேண்டும்.

நாகர்கோவில் பைபாஸில் புதிய பிளாட்பாரம்: நாகர்கோவில் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே புதிய பிளாட்பாரம் அமைத்து, கன்னியாகுமரி செல்லும் பயணிகள் எளிதாக இறங்கிச் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்.

நான்கு வழிச்சாலையுடன் இணைப்பு: கன்னியாகுமரி, நாகர்கோவில் சந்திப்பு (Junction), நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய ரயில் நிலையங்களை நான்கு வழிச்சாலையுடன் இணைக்கும் வகையில் புதிய அணுகுசாலைகளை (Approach Roads) அமைக்க வேண்டும்.

சரக்கு முனையம் மாற்றம் (Goods Yard Relocation): நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தை (Goods Yard), போக்குவரத்து நெரிசலைக் குறைக்க டவுன், தோவாளை அல்லது ஆரல்வாய்மொழி ஆகிய நான்கு வழிச்சாலைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு மாற்ற வேண்டும்.

புதிய பஸ் (Bus Port): நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் பின்புறம் பயணிகள் வசதிக்காகப் புதிய 'பஸ்போர்ட்' (Bus Port) அமைக்க வேண்டும்.

கூட்டத்தின் நிறைவில் வழக்கறிஞர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.