காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் அக்டோபர் 2-ஆம் தேதி காலை 11.00 மணியளவில் கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்து கூட்டங்களை நடத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2 காலை 11.00 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இக் கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் வறுமை ஒழிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், அரசின் பல்வேறு துறைகளின் மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்துப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும், தேவையான விவரங்களை வழங்கவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.