விரிவாக்கம் செய்யப்படவுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 53,520 மாணவ - மாணவிகள் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைந்துள்ள சமையலறைகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது பேசிய மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 900 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 53,520 மாணவ - மாணவிகள் பயனடைவர்.

மாணவர்களுக்குத் தேவையான உணவை விரைவாகவும் பாதுகாப்பாகவும் சமைப்பதற்கான பாத்திரங்கள், எரிவாயு வசதிகள், சுத்தமான குடிநீர் வசதி, சமைத்த உணவைச் சேமித்து வைக்கும் இடம் மற்றும் சமையல் பொருட்களைப் பாதுகாக்கும் கிடங்கு வசதிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மாணவர்களுக்குச் சுகாதாரமான மற்றும் ஊட்டச்சத்துமிக்க காலை உணவைத் தடையின்றி வழங்குவதே அரசின் முதன்மை நோக்கமாகும். எனவே அனைத்துப் பள்ளிகளிலும் சமையலறைகள் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாராக இருப்பதை உறுதி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

ஆய்வின் போது தலைமையாசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளிப் பணியாளர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.