தமிழ்நாட்டில் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களில் ஜி.பி.எஸ். கண்காணிப்புக் கருவி பொருத்தப்படாவிட்டால், இன்று முதல் அனுமதிச் சீட்டு வழங்கப்படமாட்டாது எனத் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தமிழ்நாட்டில் கனிம வளங்களைக் கொண்டு செல்லும் அனைத்து வகையான சரக்கு வாகனங்களிலும் சட்டவிரோதக் கனிமக் கடத்தலைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கண்காணிப்பை உறுதி செய்யவும் ஏஐஎஸ்-140 (AIS-140) தரநிலைக் கொண்ட ஜி.பி.எஸ். கண்காணிப்புக் கருவி பொருத்தி, அதனைச் சுரங்கத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கான இறுதி கால அவகாசம் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக, நவம்பர் 1-ஆம் நாளான இன்று முதல், ஏஐஎஸ்-140 ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இணையதள ஒருங்கிணைப்பு செய்யப்படாத எந்தவொரு வாகனத்திற்கும் கனிமப் போக்குவரத்து அனுமதிச் சீட்டு எக்காரணம் கொண்டும் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜி.பி.எஸ். கருவி மற்றும் செல்லத்தக்க அனுமதிச் சீட்டு இன்றி கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். அதோடு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையினருக்கு மணல், ஜல்லி உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டுமானப் பொருட்கள் தடையின்றிச் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே, இதுவரை ஜி.பி.எஸ். கருவி பொருத்தாத வாகன உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள், உடனடியாகத் தங்களது வாகனங்களில் தர அங்கீகாரம் பெற்ற ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்திச் சுரங்கத் துறையின் இணையதளத்தில் ஒருங்கிணைக்க வேண்டும்.
கட்டுமானப் பொருட்களின் தொடர் விநியோகத்தை உறுதி செய்யவும், தேவையற்ற போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்கவும் அனைத்து வாகன உரிமையாளர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சுரங்கத்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

