நாட்டையே உலுக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் வழக்கை முடித்து வைக்க அரசியல் அழுத்தம் கொடுத்தது யார் எனக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கத் தமிழக அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. "இவ்வளவு பெரிய கொடூரக் குற்றத்திலிருந்து வீரமணியைத் தப்பிக்க வைத்தது யார்?" என்று ஆளும் தமிழக வெற்றிக் கழகமும் (TVK) கேள்வி எழுப்பி வருகிறது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "திமுக ஆட்சிக் காலத்தில் புகார் அளிக்கப்பட்டு, முறையாக முதற்கட்டத் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு ஏன் மேல் விசாரணை நடத்தப்படவில்லை? 'வீடியோ தெளிவாக இல்லை' என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி இவ்வளவு பெரிய வழக்கை எப்படி முடித்து வைக்க முடியும்?
அப்படியென்றால், வழக்கை முடித்து வைக்க அரசியல் அழுத்தம் கொடுத்தது யார்? அதற்கு காரணமான அதிகாரிகள் யார் என்பதற்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எவ்வித பதிலும் இல்லை.
2024-ஆம் ஆண்டே இப் புகார் எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் பிரமுகர் தற்போது தெரிவித்துள்ளார். பின்னர் 2025-இல் இப் வழக்கை முடிக்க முயற்சிகள் நடந்துள்ளன. இவை இரண்டுமே திமுக ஆட்சிக் காலத்தில்தான் நடந்துள்ளன. எனவே, இந்த விஷயத்தை மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது.
'தனது ஆட்சிக் காலத்தில் இவ்வளவு பெரிய பாலியல் குற்ற வலைப்பின்னல் நடந்திருந்தும் உரிய விசாரணை நடத்தாதற்குக் பொறுப்பேற்கிறேன்; அதிகாரிகள் இப் பிரச்சினையை என் கவனத்திற்குக் கொண்டுவரவில்லை' என்று மு.க.ஸ்டாலின் பதில் சொல்வதுதான் நேர்மையாக இருக்குமே தவிர, 'எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' என்று கூறுவதால் இப் பிரச்சினையைக் கடந்து போக முடியாது.
அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த அதிகாரிகள் கூட்டாகச் சேர்ந்து இப் பிரச்சினையை மூடி மறைக்க முயன்றுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
எனவே, இச் சம்பவத்தில் உயர் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடைபெற வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததற்கும் அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கும் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவே காரணமே தவிர, அரசு காரணம் அல்ல" எனத் தெரிவித்தார்.

