ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகப் பிரபல ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இச் சம்பவத்தில் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ் வழக்கில் ஏற்கனவே கைதான தொழிலதிபர் வீரமணியைப் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரையும் 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அப் மனுவில், "இவ் வழக்கில் ஏற்கனவே காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட தொழிலதிபர் வீரமணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.

மேலும், இதில் இன்னும் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இக் குற்றச் சம்பவங்கள் எவ்வளவு காலமாக நடைபெற்று வருகின்றன, இதில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்த முழு உண்மைகளையும் கண்டறிய இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா முன்பு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.