திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டைச் சேர்ந்தவர் குணசேகரன் (63). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், உறவினர்கள் யாரும் இல்லாததால், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறை அண்ணா நகரில் உள்ள டேனியல் (68) என்பவருக்குச் சொந்தமான ஜெப கூடாரத்தில் கடந்த 8 மாதங்களாகத் தங்கி ஊழியம் செய்து வந்துள்ளார்.
குணசேகரனுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட நோய்கள் இருந்ததால், அதற்காகத் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார். நேற்று இரவு வரை அவரை அப்பகுதி மக்கள் நேரில் பார்த்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் வழக்கமான ஜெபக் கூட்டத்தை நடத்துவதற்காக ஜெப கூடாரத்தின் உரிமையாளர் டேனியல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
அப்போது ஜெப கூடாரத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, குணசேகரன் குப்புறப் படுத்த நிலையில், வாய் வழியாக ரத்தம் கசிந்து இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அவரது இறப்பிற்கான காரணம் நோய் பாதிப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

