தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் ரவிச்சந்திரன் (71). இவர் நேற்று காலை முடிவைத்தானேந்தல் சாலையிலிருந்து தூத்துக்குடி மெயின் ரோட்டை நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கிழக்கு நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், எதிர்பாராதவிதமாக இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரனை உடனடியாக மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.