ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் போது பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்காக, பிரபல ஈரானியத் திரைப்பட நடிகை எல்னாஸ் ஷேக்ர்டோஸ்ட்டிற்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2 ஆண்டுகள் பொது வாழ்வியல் தடையும் விதிக்கப்பட்டதை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் போது வன்முறை வெடித்ததில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், பிரபல ஈரானியத் திரைப்பட நடிகை எல்னாஸ் ஷேக்ர்டோஸ்ட் (Elnaz Shakerdoost) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஆனால், அரசின் அமைப்புகளுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டதாகக் கூறி அவர் மீது புரட்சிகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், நடிகை எல்னாஸுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், அரசியல், கலை மற்றும் இணையதள செயல்பாடுகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடையும் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெஹ்ரான் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விதித்த 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 ஆண்டுகள் தடையை உறுதி செய்து தற்போது அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு:
இது தொடர்பாக நடிகையின் வழக்கறிஞர் ஹோஷாங் போர்பாபாய் தெரிவிக்கையில்: "வன்முறையில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் மட்டுமே அந்தப் பதிவு இடப்பட்டது. மக்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்புச் சீராய்வு மனுத் தாக்கல் செய்து சட்டப் போராட்டம் நடத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

