இந்தியாவில் தங்க நகைக்கடன் சந்தை 60.6 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.23.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இதில் ரூ.6.9 லட்சம் கோடி நிலுவைத் தொகையுடன் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாகவும் சி.ஆர்.ஐ.எப். கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் (CRIF) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள், வீடு மற்றும் நிலம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மக்கள் குறைந்த வட்டியில் கிடைக்கும் தங்க நகைக்கடனை அதிகம் நாடுகின்றனர். குறிப்பாக, சிறிய நகரங்களில் வசிப்பவர்களின் பங்களிப்பு இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சி.ஆர்.ஐ.எப். வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) இந்தியாவின் தங்கக்கடன் சந்தை 60.6 சதவீதம் உயர்ந்து ரூ.23 லட்சத்து 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டின் 2-வது காலாண்டில் ரூ.10.7 லட்சம் கோடியாக இருந்த இதன் மதிப்பு, தற்போது இருமடங்கிற்கும் மேலாக வளர்ச்சியடைந்துள்ளது.
தங்க நகைக்கடன் சந்தையில் தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2026 செப்டம்பர் நிலவரப்படி திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள கடன்களின் அடிப்படையில், முதல் 5 இடங்களையும் தென்னிந்திய மாநிலங்களே பிடித்துள்ளன:
தமிழ்நாடு: ரூ.6.9 லட்சம் கோடி
ஆந்திரப் பிரதேசம்: ரூ.3.7 லட்சம் கோடி
கர்நாடகா: ரூ.2.4 லட்சம் கோடி
தெலங்கானா: ரூ.2.1 லட்சம் கோடி
கேரளா: ரூ.1.7 லட்சம் கோடி
இந்த 5 மாநிலங்களில் மட்டும் மொத்தம் ரூ.16.8 லட்சம் கோடி தங்க நகைக்கடன் நிலுவையில் உள்ளது. இது இந்தியாவின் மொத்தத் தங்கக்கடன் நிலுவையான ரூ.23.3 லட்சம் கோடியில் சுமார் 72 சதவீதமாகும்.
தங்கக்கடன் பெறுவோரின் எண்ணிக்கை 2023 செப்டம்பரில் 3.7 கோடியாக இருந்த நிலையில், 2026 செப்டம்பரில் 5.6 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் மட்டும் 45.7 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக, மொத்தக் கடன் வாங்குபவர்களில் 2.4 கோடி பேர் (42.2 சதவீதம்) பெண்கள் ஆவர்.
அதேநேரத்தில், 2026 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிய அளவிலான சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், கடன் அபாயங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

