தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினம் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 40 மூடை பீடி இலைகளைக் கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் உட்கோட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டியபட்டினம் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாகக் கியூபிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இன்று (13.10.2026) அதிகாலை 02.40 மணியளவில் வீரபாண்டியபட்டினம் சூர்யா டிம்பர் டிப்போ வடபுறம் கடற்கரைக்குச் செல்லும் வழியில் சோதனையிட்டபோது, இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 மூடை பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
இருப்பினும், இக்கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். கடத்தலில் ஈடுபட்டுத் தப்பியோடிய நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் ஆகும். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளும், சரக்கு வாகனமும் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

