கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்குக் கடந்த 11-ஆம் தேதி வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட் பிரேக் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, பராமரிப்புப் பணிகளுக்காக அந்த ரயில் யார்டில் நிறுத்தப்பட்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று (நவம்பர் 18) பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாகர்கோவிலிருந்து கோட்டயத்திற்கு ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலை மீண்டும் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, இருக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார், பெட்டியிலிருந்து சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அழுகிவிட்டதால் அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண்ணின் இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டு, மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்திருப்பது உறுதியானது. மேலும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கும் வாய்ப்புள்ளதாகப் போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து, வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய ரயில்வே போலீசார், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொலையாளிகளைக் கண்டறிய நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி இந்த ரயில் வந்தபோது பராமரிப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் யார், யார்டில் கடந்த ஒரு வாரமாகப் பணியாற்றியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

யார்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல வாய்ப்பில்லை என்பதால், ரயில்வே ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரயில் கடந்த 11-ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து வந்ததால், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.