மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்திப் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகமே காரணம். ஆட்சி அமைப்பதற்குப் போதிய பலமில்லாததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைத் தக்கவைக்கத் தவெக நாடகமாடுகிறது. தவெக அரசை ஆதரித்த தோழமைக் கட்சிகளே தற்போது எதிர்ப்பு மனநிலைக்கு வந்துவிட்டதால் அதிமுகவினரை அவர்கள் தாஜா செய்து வருகின்றனர்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் முதல் மானியக் கோரிக்கை வரை பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிப்பது இல்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் குறிப்பிட்ட 3 அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்கின்றனர்.
45 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களைப் பேசி அவையின் நேரத்தை வீணடிக்கின்றனரே தவிர, ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் காவலர்களின் கோரிக்கைகள் குறித்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.
தவெகவின் ஆட்சி செயலிழந்த ஆட்சியாக உள்ளது. பட்டப்பகலில் நடைபெறும் கொலைச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை தவெகவுக்கு ஆதரவு அளித்த இடதுசாரிக் கட்சிகளே சுட்டிக்காட்டி வருகின்றன. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணத்தைக் கைப்பற்றும் அளவிற்கு ஊழல் அதிகரித்துள்ளது.
மேலும், தவெக ஆட்சி அமைத்த பிறகு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காவிரி படுகை மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.
தற்போது நிலவும் ரூ.10 லட்சம் கோடி கடன் சுமையுடன் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் மாநிலத்தின் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும். இந்த கடனை மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்தே அடைக்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே, முதலமைச்சர் தனது துறையை முறையாகக் கண்காணித்து மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கூறினார்.

