தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 70.31% வாக்குகளும், தாராபுரத்தில் 68.08% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தொகுதிகள் காலியான பின்னணி: அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யாபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்தனர். இதன் காரணமாக இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தாராபுரம் தொகுதி நிலவரம்:

தாராபுரம் தொகுதியில் 1,07,285 ஆண்கள், 1,16,013 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் த.வெ.க சார்பில் சத்யபாமா, தி.மு.க சார்பில் சுகன்யா, அ.தி.மு.க சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி இத்தொகுதியில் 68.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மதுராந்தகம் தொகுதி நிலவரம்:

மதுராந்தகம் தொகுதியில் 1,04,886 ஆண்கள், 1,08,738 பெண்கள், 65 திருநங்கைகள் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் வாக்களிக்க 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குத் த.வெ.க சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க சார்பில் கணிதா சம்பத், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70.31% வாக்குகள் பதிவாகியுள்ளன.