நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர் 2' படத்தின் இரண்டாவது பாடலான 'ஒன் சன் ஒன் மூன்' (One Sun One Moon) நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இப் பாடல் வெளியாகி 15 மணி நேரத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துவிட்டதாகச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டது.

இருப்பினும், இதுவரை யூடியூபில் 6 மில்லியன் பார்வைகளையும், வெறும் 2 லட்சம் லைக்குகளையும் மட்டுமே இப் பாடல் பெற்றுள்ளது. வழக்கமாக ரஜினிகாந்தின் பாடல் வெளியானதும் எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஹேஷ்டேகுகள் டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கும். ஆனால், இப் பாடலுக்கு எந்தவொரு டிரெண்டிங் ஹேஷ்டேக்கும் இடம்பெறாதது படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'அல்ல போலேலே' வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், 33 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து மாபெரும் ஹிட் அடித்தது.

எனவே, முதல் பாகத்தின் 'ஹுகும்' பாடல் ரேஞ்சிற்கு இரண்டாவது பாடல் செம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இசையமைப்பாளர் அனிருத் இம்முறை ரொம்பவே ஏமாற்றிவிட்டார் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

இரண்டாவது பாகங்களுக்கு நிலவும் 'பாகம் 2 சாபத்தை' உடைத்து, தமிழ் சினிமாவில் 'ஜெயிலர் 2' மாபெரும் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாற வேண்டுமென்றால், அது முழுமையாக இயக்குநர் நெல்சன் கையில்தான் உள்ளது எனக் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் போரடிக்காத வகையிலும், கிரிஸ்ப்பான ரன் டைமுடனும் அமைத்தால் ரஜினி ரசிகர்கள் படத்தை வெற்றி பெற வைத்துவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், பெரிய போட்டிகள் இன்றித் திரைப்படம் சோலோவாக வெளியாவதால் தற்போதைக்கு ஹைப் குறைவாக இருப்பது படத்திற்கு நல்லதுதான் என்றும், விரைவில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரிக்கும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர்.