நடிகர் தனுஷ் நடிப்பில், ‘லப்பர் பந்து’ புகழ் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘டி56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மாரநாடு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இப்புதிய தொடக்கம் குறித்து தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், “’டி56’ இனிதே ஆரம்பம்... படையல் விரைவில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, எஸ்.ஜே.சூர்யா, பிரித்தி முகுந்தன், வடிவேலு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலு முதன்முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட பூஜையில் பேசிய நடிகர் தனுஷ், “இந்தப் பூஜைக்குப் பின்னால் இருக்கின்ற இந்தச் சாமியையும், முன்னால் இருக்கின்ற ரசிகர்களாகிய உங்களையும் நம்பித்தான் இந்த நிகழ்வு இன்று இங்கு நடக்கிறது.
நான் அதிகம் பேச விரும்பவில்லை. விரைவில் ‘ஓம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சந்திப்போம். இங்கே திரண்டு வந்து உங்களுடைய அன்பையும் ஆதரவையும் ஆசீர்வத்தையும் வழங்கியதற்கு ரொம்ப நன்றி” என்று தெரிவித்தார்.
வடிவேலுவின் உருக்கமான பேச்சு:
நடிகர் வடிவேலு பேசுகையில், “எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. 'ஏன் இடையில் சரியாக நடிக்கவில்லை? தனுஷ் உடன் சேர்ந்து ஏன் நடிக்கவில்லை?' என்று நீங்கள் கேட்கலாம்.
சிலர் சில விஷயங்களுக்காகத் தீக்கொளுத்திப் போடுவார்கள். அதை 'பற்றவைப்பது' என்று நம்ம ஊரில் சொல்வார்கள். எங்க சினிமாவில் தீப்பந்தத்தையே போட்டு இரண்டு பேரைப் பிரிக்கும் வேலையைப் பார்ப்பார்கள். காலச்சூழல் எங்கள் இரண்டு பேரையும் மாற்றியது.
இன்று நாங்கள் இங்கு வந்து நிற்கக்கூடிய பாக்கியத்தை 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன் மூலமாக, உங்கள் சார்பாக இந்த மாரநாட்டு கருப்பன் கொடுத்திருக்கிறார். அவர் முன்னிலையில் இந்தப் பூஜை நடக்கிறது” என்று உருக்கமாகப் பேசினார்.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரடொக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இத் திரைப்படத்திற்குத் தற்காலிகமாக ‘டி56’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

