தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இருந்து தான் விலகவில்லை என்றும், எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு தனது ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே என்றும் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விளக்கமளித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு, கட்சியின் பிரச்சாரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது எக்ஸ் பக்கத்தில்: "போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா. என்னுடைய பகலை யாரும் இருட்டாக்கவும் முடியாது; என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்கவும் முடியாது; என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்கவும் முடியாது" எனப் பதிவிட்டிருந்தார்.
இப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவர் த.வெ.க மீது அதிருப்தியில் இருப்பதாகவும், நடிகர் தனுஷுடன் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள நாஞ்சில் சம்பத் கூறியதாக: "த.வெ.க நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. கட்சியின் பிரச்சாரச் செயலாளரான எனக்கு வாய்ப்புத் தரப்படவில்லை என்ற கவலை, ஆற்றாமை மற்றும் ஆதங்கத்தையே எனது பதிவின் மூலம் வெளிப்படுத்தினேன். அந்தப் பதிவு தலைமைக்குச் சொன்னதுதான்.
அதேவேளையில் நடிகர் தனுஷுடன் இணைய இருப்பதாக இணையதளங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. அதுபோன்ற முட்டாள்தனமான முடிவை நான் எடுக்க மாட்டேன். நான் இன்னமும் த.வெ.க-வில்தான் இருக்கிறேன், கட்சியிலிருந்து விலகவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

