பிரபலத் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை வர்ஷினி வெங்கட். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த தருண் என்பவர் சினிமா பைனான்ஸ் மற்றும் ஷேர் மார்க்கெட் தொழில்கள் செய்து வருகிறார். தொழில் நிமித்தமாகச் சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த தருணிற்கு, நண்பர் மூலமாக நடிகை வர்ஷினியின் பழக்கம் கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அப்போது தான் குறும்படம் எடுக்க நிதி உதவி செய்யுமாறு வர்ஷினி கேட்டுள்ளார். அதற்குத் தருணும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வர்ஷினி பிற ஆண் நண்பர்களுடன் பழகுவது தருணிற்குப் பிடிக்காததால், அவரை விட்டுப் பிரிய தருண் முடிவு செய்துள்ளார். இதற்கிடையே, கடந்த மாதம் 22-ஆம் தேதி கிண்டியில் உள்ள ஹோட்டல் பாருக்குத் தனது நண்பர்களுடன் வந்த வர்ஷினி, அங்கிருந்த தருணிடம் தனியாகப் பேச வேண்டும் எனக் கூப்பிட்டுள்ளார்.

அப்போது வர்ஷினியுடன் வந்த அவரது நண்பர் சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்துகொண்டு தருணைத் தாக்கி, அவரிடமிருந்த ரூ. 50,000 ரொக்கத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தருணைத் தொடர்புகொண்ட சஞ்சய், "உன்னால் வர்ஷினியின் வாழ்க்கை வீணாகிவிட்டது, அவருக்கு ரூ. 3.5 லட்சம் கொடுக்க வேண்டும்" என மிரட்டியுள்ளார். பயந்துபோன தருண் அப் பணத்தை வர்ஷினியின் வங்கிச் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

அதன்பின்னரும் விடாமல், "காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்" என மிரட்டி மேலும் ரூ. 2 லட்சத்தை வாங்கியுள்ளனர். இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி சஞ்சய் மீண்டும் தருணைத் தொடர்புகொண்டு, "இன்னும் ரூ. 27 லட்சம் தர வேண்டும்; இல்லையென்றால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன்" எனத் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நடிகை வர்ஷினி கைது - தலைமறைவான நண்பர்களுக்கு வலைவீச்சு:

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் தருண், தனது வழக்கறிஞருடன் சென்று கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திட்டமிட்டு தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்கும் சதியில் நடிகை வர்ஷினி ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வர்ஷினியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சஞ்சய் உட்பட 3 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.